ரூ.50 ஆயிரம் மின்கட்டணம்.. ஷாக் ஆன கூலித்தொழிலாளி… அதிகாரிகளின் அலட்சியம் என கண்ணீர்..!!
Author: Babu Lakshmanan21 February 2023, 3:52 pm
காஞ்சிபுரம் ; 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் என மின்வாரிய அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சியடைந்த கூலி தொழிலாளி மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒரிக்கை முரளி நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். கூலி தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் முரளி நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக ஓரிக்கை மின்சார வாரிய அலுவலகம் மூலம் தற்காலிக மின் இணைப்பு பெற்றார். வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக இணைப்பு துண்டிக்கப்பட்டு குடியிருப்புக்கான நிரந்தர மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட குடியிருப்பில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்து மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டிய, மின் கணக்கீட்டாளர் ஒருமுறை கூட மணிகண்டனின் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் கடந்த 8 மாதங்களாக 2 மாதங்களுக்கு ஒருமுறை ஓரிக்கை மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று மின் கட்டணத்தை கேட்டு அபராதத்துடன் செலுத்தியுள்ளார். இதிலும், மின்சார வாரிய அதிகாரிகள் முறையாக கணக்கீடு செய்யாமல் வீடு பூட்டப்பட்டுள்ளதாக பதிவு செய்து, தோராயமாக ஒரு கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.
இந்நிலையில், இம்மாதம் மின் கட்டணம் செலுத்த சென்றபோது ரூ.55 ஆயிரத்து 230 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் மணிகண்டன் பெரும் அதிர்ச்சி உற்றார். இது தொடர்பாக மின்வாரியத்தை அணுகி விளக்கம் கேட்ட போது முறையான பதில் இல்லை , மேலும் பணத்தைக் காட்டுங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அவ்வளவு தொகையை கட்ட முடியாமல் பரிதவித்து வருகிறார்.