நூலிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகர்.. பதறிப் போயி அவரே போட்ட பதிவு ; ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan22 February 2023, 9:59 pm
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் விடுதலை. இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சென்னை கேளம்பாக்கத்தில் விடுதலை படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய போது ரோப் அறுந்தி விழுந்ததில் சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட படக்குழுவினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி ‘இந்தியன் 2’ படத்துக்கான சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது. இதில், உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் மது மற்றும் தயாரிப்பில் உதவியாக இருந்த சந்திரன் ஆகியோர் 3 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவங்களைப் போலவே, விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பிலும் விபத்து ஏற்பட்டுள்ளது.
லத்தி திரைப்படத்தை முடித்திருக்கும் நடிகர் விஷால், தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஷாலின் 33-வது படமாகும். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.
இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று இரவு ஒரு லாரி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது.
அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்தனர்.லாரி நிற்காமல் வருவதை பார்த்த தொழிலாளர்கள் இரண்டு புறமும் சிதறி ஓடினர். அப்போது, நடிகர் விஷால் கீழே படுத்திருந்தார். அவருக்கு அருகாமையிலேயே அந்த கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்றது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த விஷால், நூலிழையில் உயிர்தப்பியதாக பதிவிட்டுள்ளார்.