இனி எல்லாமே இபிஎஸ்தான்… அதிமுகவின் மாஸ்டர் பிளான் : ஜெயலலிதா வழியில் வெற்றி!!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2023, 10:26 am
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஓ பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம், சென்னை ஹைகோர்ட்டில் உடனடியாக தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தார். எனினும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர்.
இதை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர்
அமர்வு விசாரணை நடத்தி அதிமுக பொதுக்குழு சட்ட விதிகளுக்கு உட்பட்டே கூட்டப்பட்டு இருக்கிறது. எனவே இந்தக் கூட்டமும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும்” என்று கடந்தாண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி தீர்ப்பு வழங்கியது.
எனினும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் இதை ஏற்கவில்லை. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கைத்தான் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு கடந்த ஜனவரி மாதம் ஒரு வாரம் தீவிர விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருந்தது.
இந்த வழக்கின் மீதுதான் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அதிமுகவின் ஜூலை 11ந் தேதி பொதுக்குழு கூட்டமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று அதிரடியாக கூறி இருக்கிறது.
தவிர அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அத்தனை மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தும் உள்ளது.
இது அதிமுகவினருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் ஒரு தீர்ப்பாகும். ஏனென்றால் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தற்போது முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்.
அதிமுக பொதுக்குழுவை அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இன்று டெல்லி செல்ல உள்ளார்.
அதிமுக சார்பில் விடுக்கப்படும் இந்த கோரிக்கையில் பொதுக்குழுவையும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் அங்கீகரிக்க வலியுறுத்தப்பட உள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், தேர்தல் ஆணையம் தன் முடிவை அறிவிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தீர்ப்பு வெளிவந்துவிட்ட நிலையில் தேர்தல் ஆணையமே, பொதுக்குழுவையும் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸையும் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலையும் கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிக்க முயற்சிகள் எடுத்துவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.