கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் லட்சம் லட்சமாக பணம் சுருட்டல் : அரசுக்கே டிமிக்கி கொடுத்த அதிகாரிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2023, 11:15 am
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக வெள்ளலூரை சேர்ந்த மீனசென்னம்மாள் (வயது 44) என்பவர் பணியாற்றி வருகிறார்.
மேலும் அச்சங்கத்தில் எழுத்தராக சுந்தரவடிவேலு (வயது 66) என்பவர் பணியாற்றி 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் தொழிலாளர்கள் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 2018-ம் ஆண்டு முதல் மீண்டும் எழுத்தராக பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தணிக்கை நடந்தது. தணிக்கையில் மீனசென்னம்மாள், சுந்தரவடிவேலு ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 2015 முதல் 2021-ம் ஆண்டு காலக்கட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பெற்ற கடன் தொகையை பெற்றுக்கொண்டு அதை சங்கத்தில் வரவு வைக்காமலும், சங்கத்தின் செலவுகளை பொய்யாக கணக்கு எழுதியும் 61 லட்சத்து 58 ஆயிரத்து 994 வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து வீட்டு வசதி வாரிய சங்க துணை பதிவாளர் அர்த்தநாரீஸ்வரன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அருண் உத்தரவின்பேரில் மீனசென்னம்மாள் மற்றும் சுந்தரவடிவேலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு கைது செய்த போலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.