சரிதா நாயர் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. உணவில் விஷம் கலந்து கொலை முயற்சி..? கேரளாவை உலுக்கும் அடுத்தடுத்த சம்பவம்!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 4:56 pm

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்புடைய சரிதா நாயர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். குறைந்த விலையில் சோலார் பேனல் அமைத்து தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி, பல கோடி ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது.

இதன்மூலம், உம்மன்சாண்டி மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இதையடுத்து உம்மன் சாண்டி பதவி விலகக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் புகார் கூறியது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, தனது கார் ஓட்டுநர் வினுகுமார் சிலருடன் சேர்ந்து உணவில் விஷம் கலந்து தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக சரிதா நாயர் கூறினார். இதையடுத்து போலீசார் வினு குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில், பார்வை குறைபாடு, இடதுகாலில் சுகவீனம் உள்பட பல்வேறு பிரச்சனைகளால் சரிதா நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரது ரத்த மாதிரி மற்றும் தலைமுடி ஆகியவை பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தேசிய தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன்முடிவுகள் வெளியான பிறகு தான், உணவில் விஷம் கலந்தது உண்மையா..? என்பது குறித்து தெரிய வரும்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!