விவசாயி மனைவியை கடத்திய முறுக்கு கம்பெனி அதிபர்… இரு குழந்தைகளுடன் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கணவன்..!!
Author: Babu Lakshmanan1 March 2023, 10:33 am
விருவீடு அருகே, முறுக்கு கம்பெனியில் வேலை தருவதாக கூறி, விவசாயி மனைவியை கடத்திய முறுக்கு கம்பெனி அதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, விருவீடு போலீஸ் சரகம் தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (35). இவர் மனைவி சரஸ்வதி (34). இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளன.
சோழவந்தான் அருகே குருவித்துறையைச் சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் (31), கேரளாவில் முறுக்கு கம்பெனி நடத்தி வருகிறார். இவர், அடிக்கடி தெப்பத்துப்பட்டி கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி முதல் தங்கப்பாண்டி மனைவி சரஸ்வதியை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்கபாண்டி தனது உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினார்.
பின்னர், விருவீடு காவல் நிலையத்தில் தனது மனைவி சரஸ்வதியை, குருவித்துறையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், முறுக்கு கம்பெனியில் வேலை தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று விட்டதாக, புகார் செய்தார். இதுகுறித்து விருவீடு காவல்துறை சார்பு ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சரஸ்வதியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கப்பாண்டி தனது மகன் மகளுடன் இன்று விருவீடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தனது மனைவியை தேடி, கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனால், இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.