நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம்… கூலித்தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை : திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
4 March 2023, 8:44 am

திண்டுக்கல்லில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை கழுத்தை நெரித்தும், கல்லை தலையில் போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பாரதிபுரம் 1வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வீரன் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர். வீரன் கூலி வேலை செய்து வருகிறார். மேலும், கடந்த சில வருடங்களாக சிறுமலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவ்வப்போது பாரதிபுரத்துக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று பாரதிபுரம் வந்த வீரன், அங்கு உள்ள ஒரு சுகாதார வளாகம் அருகில் பாரதிபுரத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்குள் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வீரனின் நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து அருகில் கிடந்த ஒரு கயிற்றை எடுத்து அவரை கழுத்தை நெரித்து அருகில் இருந்த பாறாங்கல்லையும் எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட வீரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்த நிலையில், வீரன் உடன் மது அருந்திய அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!