அண்ணாமலையை தொட்டால் தமிழகம் தாங்காது : திமுக அரசுக்கு ஹெச் ராஜா எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan7 March 2023, 7:39 pm
தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி விவகாரம் பற்றி காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. அண்ணாமலையின் தலைமை சரியில்லை என கூறி நிர்மல் குமார் அதிமுக வில் இணைந்தார்.
மறுநாளே திலீப் கண்ணன் என்பவர் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், சொந்த கட்சிக்காக உழைத்தவர்களை வேவு பார்ப்பதா என அண்ணாமலை மீது விமர்சனம் வைத்து வெளியேறினார்.தற்போது அவரும் அதிமுகவில் இணைந்து விட்டார்.
இந்த நிலையில் வட மாநிலத்தவர் விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: ஒருகாலத்தில், வட மாநிலத்தவர்களையும், இந்தி மொழியையும் அவதூறாக பேசி வந்த திமுகவினர், இன்று வட மாநிலத்தவருக்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றனர். காரணம் என்ன.. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் வட மாநிலத்தவர்கள்தான் வேலை செய்கின்றனர். அவர்கள் இல்லை என்றால் தமிழக பொருளாதாரமே சரிந்துவிடும். இதை நான் சொல்லவில்லை. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். இன்றைக்கு தமிழர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்களை திமுக அரசு குடிகாரர்களாக மாற்றிவிட்டது.
இப்போது வட மாநிலத்தவரை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. இப்போது வட மாநிலத்தவர்களுக்கு ஆதரவாக பேசும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் குறித்து விஷத்தை கக்கினார்கள்.
வட மாநிலத்தவர்கள் குறித்து முதல்வர் பேசியதையும் ஆர்.எஸ். பாரதி, பொன்முடி ஆகியோர் பேசியதையும் அடிக்கோடிட்டு காட்டி கருத்து தெரிவித்து வந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சும் கட்சியா பாஜக? நாங்களே பனங்காட்டு நரிகள். வழக்கை காட்டியெல்லாம் எங்களை பயமுறுத்த முடியாது.
எங்கள் தலைவர் அண்ணாமலையை தொடடால் தமிழகம் தாங்காது. இதை ஓர் எச்சரிக்கையாகவே தமிழக அரசுக்கு கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எச். ராஜா கூறினார்.
முன்னதாக, செய்தியாளர் ஒருவர், பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை என்றும், அதனால்தான் அம்மாநிலத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதாக கூறுகிறார்களே.. என கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எச். ராஜா, “பீகாரில் வேலைவாய்ப்பு இல்லை என யார் சொன்னது.. டெல்லியில் லட்சக்கணக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள். கர்நாடகாவில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள். அப்படியென்றால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால்தான் அவர்கள் அங்கு இருக்கிறார்களா? என வினவினார்.