கவாஜாவால் தப்பிய ஆஸ்திரேலிய அணி… முதல் நாளில் நிதான ஆட்டம் ; பந்துவீச்சில் தெறிக்கவிட்ட ஷமி…!!!
Author: Babu Lakshmanan9 March 2023, 6:02 pm
இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி வலுவான ரன்களை குவித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியின் மூலம் நட்பு உருவாகி 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மைதானத்திற்கு சென்று போட்டியை சிறிது நேரம் கண்டுகளித்தனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. ஹெட் 32 ரன்னுக்கும், லபுஷக்னே 3 ரன்னும் ஆட்டமிழந்தாலும், மறுபுறம் கவாஜா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். அவருக்கு கேப்டன் ஸ்மித் பக்கபலமாக நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்தார்.
பின்னர், ஸ்மித் 38 ரன்னும், ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த க்ரீன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கவாஜா சதம் விளாசினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 104 ரன்னுடனும், க்ரீன் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷமி 2 விக்கெட்டுக்களும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.