ரூ.1000 எங்கே என கேள்வி கேட்பீங்க…? அமைச்சர் துரைமுருகன் சொன்ன கலகல பதில்… பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகளிர் அப்செட்…!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 6:20 pm

வேலூர் : தேர்தலுக்குள் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துடுவோம் என்றும், ஓட்டு கேட்டு வரும்போது பாக்கி வைக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதம் அடைந்த காட்பாடி தொகுதிக்குட்பட்ட மேல்பாடி தரைபாலம் 12.94 கோடியிலும், பொன்னை அணைகட்டை 19.50 கோடியிலும் புணரமைத்தல் பணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பேசியதாவது :- இந்த நிதிநிலை அறிக்கையிலேயே காட்பாடிக்கு சிப்காட் வந்துவிடும். அதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதேபோல், காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்க்கு 100 கோடி நிதி 2 நாட்களுக்கு முன்பு தான் ஒதுக்கப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ஒரு நாள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நான் சந்தித்து பேசும் போது, அவர் என்னிடம் கேட்டார், நீங்க தானே திமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவையில் எவ்ளோ நாளாக இருக்கீங்க என பிரதமர் மோடி கேட்டார். நான் 54 ஆண்டு என்றதும் “What 54 Years” என ஆச்சரியப்பட்டார். ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் எனக் கூறினேன். அதற்கு, இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என கூறினார் மோடி.

12 முறை போட்டியிட்டவர் கேரள முதல்வர் உம்மன்சண்டி. இதற்கு காரணம் காட்பாடி தொகுதியையும், மக்களையும் எனது கோயிலாக, தாயாக பார்க்கிறேன். தமிழகத்திலேயே 2 ஆண்டில் அதிக பணிகளை செய்தது காட்பாடி தொகுதி தான். தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் உள்ள சிவன் கோவில், அரிஞ்சய சோழன் மேல்பாடி போரில் இறந்ததன் நினைவால், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோயிலை பற்றி நான் பேசி பேசி அதிகமானர் வருகை தருகிறார்கள். இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைக்கிறார்கள். இது மாநில அரசிடம் இருந்தால் உடனடியாக செய்திருப்போம். ஆனால் இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

பெண்கள் நீங்க கேட்களாம், அந்த ஆயிரம் ரூபாய் எங்க என கேட்பீங்க, கவலை படாதீங்க விரைவில் வரும். தேர்தலுக்கு முன் அந்த பாக்கியை கொடுத்து விடுவோம். தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் போது பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வோம், என பேசினார் அமைச்சர் துரைமுருகன்.

மேலும், இப்போது உள்ள பெண்கள் குழந்தைகளை போட்டு பொத்து பொத்துன்னு அடிக்கிறாங்க. அதற்கு காரணம் அவர்கள் பெற்றெடுப்பதில்லை. கத்தரிக்கோல் தான் பெற்றிருக்கிறது. நேரா மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு மருத்துவர் வயிற்றை கிழித்து ஆபரேஷன் செய்து வயிற்றிலிருந்து குழந்தையை தலகாணியை போல் தூக்கி போட்டு விடுகிறார். பிறகு தாய் கேட்கிறாள் ஆணா, பெண்ணா என கத்திரிக்கோல் பெற்றெடுத்தால் இப்படித்தான் கேட்பார்கள், என பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, வெளியிடட்டும், அது அவருடைய இஷ்டம். அதுக்கு நாம் என்ன செய்ய முடியும் என துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

ஒரு காலத்தில் திராவிட கட்சிகள் தான் தமிழகத்தின் அடையாளம். ஆனால், இன்று பாஜகவை நம்பிதான் திராவிட கட்சிகள் உள்ளன என கேட்டதற்கு, அது அவர்களுடைய கருத்து என துரைமுருகன் கூறினார். அண்ணாமலை, ஜெயலலிதா உடன் ஒப்பிடுவது சரியா..? அதெல்லாம் எனக்கு தெரியாது என பதில் கூறினார்.

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ,.1000 மகளிர் உதவித் தொகை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு, அமைச்சர் துரைமுருகனின் பேச்சு அதிருப்தியாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 609

    0

    0