நீட் தேர்வு ரத்து எப்போது?… ஜகா வாங்கிய உதயநிதி!
Author: Udayachandran RadhaKrishnan15 March 2023, 8:59 pm
2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அளித்த மிக முக்கிய வாக்குறுதிகளில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதும் ஒன்று.
நீட் தேர்வு ரத்து வாக்குறுதி!!
இந்த வாக்குறுதி அப்போது அரசு பள்ளி +2 அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் வெகுவாக ஈர்த்து 12 லட்சம் முதல் 15 லட்சம் வாக்குகளை திமுக கூட்டணிக்கு கூடுதலாக பெற்றுத்தர காரணமாக அமைந்தது என்றும் இதனால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றமே நிகழ்ந்தது என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு.
இந்த நீட் தேர்வு ரத்து உறுதி மொழியை 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுக அளித்திருந்தாலும் கூட, 2021 தமிழக தேர்தலில்தான் மிகத் தீவிரமாக பயன்படுத்தியது.
அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி இருவருக்கும் இணையாக இந்த வாக்குறுதியை வைத்து அதிகமாக பிரச்சாரம் செய்தவர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு ரத்து ரகசியம்
தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் சென்ற இடங்களில் எல்லாம் நீட் தேர்வு ரத்து பற்றி விரிவாக பேசினார். அது மட்டுமல்லாமல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேலி செய்யும் விதமாக, “தமிழகம் தற்போது அதிமுக ஆட்சியாலும் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியாலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. நீட் தேர்வால் நாம் 13 உயிர்களை இழந்திருக்கிறோம். நீட் தேர்வு தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் நீட் தேர்வில் விலக்கு வாங்கி விடுவோம் என நம்மை ஏமாற்றுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியும், தலைவருக்குத் தெரியும். எப்படி ரத்து செய்வோம் என்ற ரகசியத்தை சொல்லுங்கள் என்று எங்களிடம் ஆட்சியாளர்கள் கேட்கின்றனர். ஒரேயொரு ரகசியம்தான். மக்கள் நன்றாக இருக்கவேண்டும்,
கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணையோடு மாநில உரிமைகள் பறிபோக கூடாது என நினைத்தாலே போதும். அது இன்றைய ஆட்சியாளர்களிடம் அறவே கிடையாது. ஆனால் அந்த ஆளுமைத் திறன் திமுக தலைவருக்குத்தான் இருக்கிறது” என்று திமுக பற்றி பெருமிதத்துடன் ஆவேசமாகவும் குறிப்பிட்டார்.
நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக
ஆனால் 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைத்தாலும் கூட இதுவரை நீட் தேர்வை திமுக அரசால் ரத்து செய்ய முடியவில்லை என்பதுதான் எதார்த்த நிலை.
2021ம் ஆண்டு ஜூன் மாதம் திமுக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி
ஏ.கே. ராஜன் கமிட்டி அளித்த அறிக்கையின்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்ககோரும் சட்ட மசோதா முதலில் தமிழக ஆளுநர், பிறகு குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுக்காக சென்று தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக காத்திருக்கிறது.
U Turn அடித்த உதயநிதி!
இந்த நிலையில்தான் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வு ரத்து தொடர்பான திமுக வாக்குறுதி குறித்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த சில கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு பேசு பொருளாக மாறி இருக்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பெயரில் புதிய கலையரங்கம் ஒன்றும் இந்த மருத்துவமனையில்
திறக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் சட்டப்போராட்டம்
இதில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி பேசும்போது,”நீட் தேர்வு ரகசியத்தை கூறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அந்த ரகசியம் வேறு ஒன்றும் இல்லை. எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும்போது அதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுப்பதுதான், அந்த ரகசியம். இப்போது அனிதாவின் பெயரால் அரங்கமாக திறக்கப்படுகிறது. அதன் பெயர் பலகையை பார்க்கும்போது நீட் தேர்வு ரத்து தான் உங்களுடைய நினைவிற்கு வர வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை சட்டப் போராட்டம் தொடரும் கடந்த
15 நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடியை சந்தித்தபோதும் நீட் தேர்வு ரத்து குறித்து கோரிக்கை விடுத்தேன். அவர் நீட் தேர்வின் நன்மைகள் குறித்த பல்வேறு காரணங்களை கூறினார்.
ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டத்தை திமுக தொடரும் என்று இறுதியாக சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அதுதான் அந்த ரகசியம்” என்று கூறியுள்ளார்.
“அதாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடும் என்று அமைச்சர் உதயநிதி கூறுவதன் மூலம் இதற்கான கால அவகாசம் இன்னும் நிறைய தேவைப்படும் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறார். இதனால் அது இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடியுமா?… அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகுமா? என்ற கேள்விகள்தான் எழுகிறது. இது எப்படி ரகசியமாகும் என்பதுதான் புரியவில்லை” என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நளினி சிதம்பரம் வைத்த செக்
“ஏனென்றால் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு சட்டப்படி செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தபோது சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதிட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர்
ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், “நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமானால், தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் திமுக அரசின் நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி காண முடியுமா? என்ற சந்தேகமும் எழுகிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த யாராவது ஒருவர் நீட் விலக்கு தொடர்பாக வழக்கு தொடர்ந்தாலும் சிக்கல் உருவாகலாம்.
நீட் தேர்வு அரசியல் சாசனத்துக்கு எதிரானது
இனி நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டதால்தான் என்னவோ கடந்த மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் நீட் தேர்வு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி திமுக புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதனால்தான் திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று அமைச்சர் உதயநிதி கூறி இருக்கிறாரோ என்று கருதத் தோன்றுகிறது.
உண்மையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு + 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அதில் 99 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்களே பயனடையும் வாய்ப்புகள்தான் அதிகம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் விளிம்பு நிலை, ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
அனிதா பெயரில் அரங்கம்
ஏனென்றால் தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத 10 ஆண்டு காலகட்டத்தில் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 ஆயிரம் மாணவர்களில் 250 பேர் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் என்ற ஆதாரப்பூர்வ வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் நளினி சிதம்பரம் முன் வைத்தார். அவருடைய அந்த வாதத்தையும் ஏற்றுக் கொண்டுதான் 2017ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அனிதாவின் பெயரால் இந்த அரங்கம் திறக்கப்படுகிறது. அதன் பெயர் பலகையை பார்க்கும்போது நீட் தேர்வை எதிர்த்து அவர் கடைசி வரை போராடியதுதான் அனைவரின் நினைவிற்கு வரும் என்று உதயநிதி கூறி இருக்கிறார். இது வரவேற்க தக்க, பாராட்ட வேண்டிய விஷயம்தான்.
எடப்பாடி பழனிசாமி பெயர்தான் ஞாபகத்துக்கு வரும்
அதேநேரம் அதிமுக ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிடம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் என 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கி அதை கட்டியும் முடித்தார்.
அதனால் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று கூறும்போது அங்கே எடப்பாடி பழனிசாமியும், தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் 550 பேர் வரை ஆண்டுதோறும் மருத்துவராகும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் அவர் போராடி பெற்றுக் கொடுத்ததும் கூடவே ஞாபகத்துக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒருவேளை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் கூட இது போன்றதொரு அரிய வாய்ப்பு தமிழக அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது என்பதும் உண்மை” என்று அந்த அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.