+2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தமிழக அரசு வைத்த ‘செக்’… அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஆப்சென்ட் மாணவர்கள்..!!
Author: Babu Lakshmanan16 March 2023, 1:12 pm
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.
“பப்ளிக் போலீஸ்” என்னும் தன்னார்வ அமைப்பு சட்ட உரிமை விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஊழல், குற்றம், சாதிய வேறுபாடுகளை களைவதற்கான நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் கருத்தரங்கம் சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. அதில் ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது :- 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகளை வைரஸ் தொற்று காரணமாக மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை. வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத் துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும்,
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர். அதற்கு குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக என்பது குறித்து ஆராயப்படும். அதிகமாக தேர்வு எழுத தவறிய மாணவர்கள் உள்ள கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளோம். இப்போது வரை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை, என தெரிவித்தார்.