பொன்விழா அல்ல இது பெண் விழா : சல்யூட் அடித்து உணர்ச்சி பொங்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!!
Author: Udayachandran RadhaKrishnan17 March 2023, 11:59 am
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து 50 ஆண்டுகள் தொட்டுள்ள பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த விழாவில் டி.ஜி.பி., காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால் நடத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதை, சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் பெண் போலீசார் நிகழ்த்திக் காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் அவள் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது, மகளிர் தின உரையில் பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்று பெண் காவலர்கள் நிகழ்த்திக் காட்டிய வீர செயல்கள், இங்குள்ள அனைத்து ஆண்களின் பார்வையையும் மாற்றிவிட்டது.
பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது ‘பெண் விழா’. கம்பீரமாக சிங்கப்பெண்களைப் போல் உட்கார்ந்திருக்கும் உங்களைப் பார்க்கும் போது, இதைப் பார்க்க அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி ஆகியோர் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முதலாக பெண்களும் காவலர்கள் ஆகலாம் என்பதை உருவாக்கி காக்கி உடை அணிய வைத்து, பெண்கள் கையில் துப்பாக்கியும் ஏந்த வைத்தவர் கலைஞர் கருணாநிதி.
அவரது தொலைநோக்கு திட்டத்தால் இன்று 34 ஆயிரம் பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர். முதலமைச்சர் என்ற முறையில் எனக்கான பாதுகாவலர் படையிலும் பெண் காவலர்கள் உள்ளனர்.
ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட். பொன்விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைத்து பெண் காவலர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.