தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு… வேதனையில் 7 வயது மகன் கிணற்றில் தள்ளிக்கொலை ; வங்கி மேலாளர் எடுத்த முடிவு..!!
Author: Babu Lakshmanan18 March 2023, 6:19 pm
கேரளாவில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த துக்கத்தில், மகனை கொலை செய்துவிட்டு, வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் உப்புத்துறையை சேர்ந்த டோம் என்பவர் நகை கடை ஊழியராவார். இவரது மனைவி லிஜா (38) தொடுபுழாவில் உள்ள கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2வது படிக்கும் பென் (7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 2வது முறையாக கர்ப்பமாக இருந்த லிஜா, கடந்த 28 நாட்களுக்கு முன்பு உப்புத்துறையில் உள்ள அவரது தாய் வீட்டில் வைத்து பெண் குழந்தை பிறந்தது.
கடந்த 14ம் தேதி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லிஜா குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும், தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு மனமுடைந்த லிஜா, குழந்தை இறந்த துக்கத்தில் லிஜா வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், 16ம் தேதி லிஜாவையும், மகன் பென்னையும் வீட்டில் விட்டு, குடும்பத்தினர் குழந்தைக்கு இறுதி சடங்கு செய்வதற்காக அனைவரும் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டில் இருவரையும் காணாததால் அவர்களை தேடி அழைந்துள்ளனர்.
நீண்ட நேரம் தேடியும் அவர்கள் கிடைக்காத நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள 40 அடி ஆழ கிணற்றில் லிஜாவும், அவரது மகன் பென்னும் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புத்துறையின் உதவியுடன் இருவரின் சடலமும் மீட்கப்பட்டது.
இருவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், போலீசார் விசாரணை நடத்தியதில், குழந்தை இறந்த துக்கம் தாங்காமல், மகனையும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு, அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை இறந்த துக்கத்தில், மகனை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்வபம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.