‘ரூ.2500 தரேன்னு சொன்னீங்க… இப்ப ரூ.100 தான் அறிவிச்சிருக்கீங்க’ : எதிர்பார்த்தது எதுவுமே இல்லையே… வேளாண் பட்ஜெட்டால் புலம்பும் விவசாயிகள்!!
Author: Babu Lakshmanan21 March 2023, 1:23 pm
தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் லாபகரமான விலை தர வேண்டும் – விவசாயசங்கத் தலைவர் அய்யாகண்ணு
வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று காலை சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்டை பல்வேறு தரப்பினர் வரவேற்றும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளுக்கு பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது :- வேளாண் பட்ஜெட்டில் லாபகரமான விலை கொடுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. நெல்லுக்கு 2500 ரூபாயும், கரும்புக்கு 4000 ரூபாயும் தருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு லாபகரமான விலை தேவை.
பயிர் அழிந்தால் அதற்கான லாபகரமான விலை கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். அதுவும் அறிவிக்கப்படவில்லை. தனிநபரிடம் இன்சூரன்ஸ் செய்தால் அவர்கள் விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் இன்சூரன்ஸ் இல்லை என கூறுகின்றனர்.
இன்சூரன்ஸை அரசு எடுத்து நடத்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகளை காப்பாற்ற முடியும். விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வார் என்று எதிர்பார்த்தோம். தள்ளுபடியும் செய்யவில்லை. தற்போது வேளாண் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் அதிகாரி கையில் தான் செல்லும். விவசாயிகளுக்கு 10, 20 சதவீதம் தான் சென்று அடையும்.
எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையில் ஒரு ஏக்கருக்கு செலவு செய்யும் தொகை விட கூடுதலாக கொடுக்கப்பட வேண்டும். 30 ஆயிரம் இருந்தால் அதற்கு ரூபாய் 15,000 சேர்த்து 45 ஆயிரம் தரப்பட வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டும்.
இந்த விவசாய பட்ஜெட்டில் லாபகரமான விலை தர வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு பலனளிக்கும், என தெரிவித்தார்.