போதை மாத்திரைக்கு அடிமையாகும் மாணவர்கள்.. பள்ளிக்கு முன்பே மாத்திரைகள் விற்பனை ; 2 வாலிபர்கள் கைது..!!
Author: Babu Lakshmanan21 March 2023, 4:16 pm
கோவை : செல்வபுரம் தனியார் பள்ளி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ்ரகள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகர போலீசார் தீவிரமாக கண்காணித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், செல்வபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் தனியார் பள்ளி அருகே சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த கரும்புக்கடையை சேர்ந்த நவாஸ் (29), உக்கடத்தை சேர்ந்த சரீப் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 190 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.