விபரீதமான விளையாட்டு… மனைவி கண்முன்னே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த கணவன் ; கதறி அழுத குடும்பம்…!!

Author: Babu Lakshmanan
22 March 2023, 11:33 am

வேடசந்தூர் அருகே பாறைக்குளியில் மனைவியுடன் துணி துவைக்க சென்ற கணவர் தண்ணீருக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி.இவரது கணவர் வயது அமீர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று இவர்கள் தங்களின் துணிகளை துவைப்பதற்காக பாண்டியன் நகர் அருகே உள்ள பாறைக்குழிக்கு சென்றுள்ளனர். அங்கு மகாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அமீருக்கும் மகாலட்சுமிக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அமீர் நான் தண்ணீருக்குள் குதிக்கப்போகிறேன் என்று விளையாட்டு தனமாக மகாலட்சுமியை மிரட்டியுள்ளார். திடீரென கால் தடுமாறி அமீர் தண்ணீருக்குள் தவறி விழுந்தார். தண்ணீரில் கொடிகள் அதிகம் இருந்ததால் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் தன்னுடன் விளையாடுவதாக நினைத்துக் கொண்ட மகாலட்சுமி நடப்பதை கண்டு கொள்ளாமல் துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நேரம் ஆகியும் கணவர் தண்ணீரை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த மகாலட்சுமி கூச்சலிட்டுள்ளார்.

மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து தண்ணீருக்குள் இறங்கி தேடினர். வெகு நேரம் தேடியும் அமீர் கிடைக்காததால், இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தி்ற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி கொடியில் சிக்கியிருந்த அமீரின் உடலை மீட்டு எரியோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதனைத்தொடர்ந்து போலீசார் அமீரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளையாட்டு வினையானதால் தனது கணவனை பறிகொடுத்ததை தாங்க முடியாத மகாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் கதறி அழுதது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?