தமிழக பெண்களை இப்படியா அவமானப்படுத்துவீங்க… எதை வைத்து தகுதியை தீர்மானித்தீர்கள் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குஷ்பு கேள்வி..!!

Author: Babu Lakshmanan
22 March 2023, 12:10 pm

சென்னை : தமிழகத்தில் உள்ள 3 கோடி பெண்களை திமுக அரசு அவமானப்படுத்தி விட்டதாக பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியானது. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது.

அதாவது, தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக சொல்லிவிட்டு, தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு எனக் கூறுவதா..? என்று திமுக அரசுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக பிரமுகரும், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு தமிழக அரசின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வாய் ஜாலத்தில் திமுகவினர் கில்லாடிகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டது. அதை நம்பி மக்கள் வாக்களித்து ஏமாந்து போய்விட்டனர்.

தமிழகத்தில் சுமார் 3.60 கோடி பெண்கள் உள்ளனர். அவர்களில் 80 லட்சம் பேரை தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்து உரிமைத்தொகை வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் எஞ்சிய 2½ கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை பெறுவதற்கு உரிமை இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். எந்த தகுதியின் அடிப்படையில் பெண்களை பிரித்தீர்கள்? தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லி இந்த பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

வறுமை கோட்டை தாண்டி விட்டார்களா? வசதியான வாழ்க்கை வாழுகிறார்களா? எதை அடிப்படையாக வைத்து தகுதியை நிர்ணயித்தீர்கள்? தேர்தல் நேரத்தில் இதை நேரடியாக சொல்லி இருக்கலாமே. சொன்னால் வாக்கு விழாது என்ற பயம். அதனால் தான் பொய்யான வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி பேசி ஏமாற்றி இருக்கிறது.

ஒரு அரசு என்பது எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால் திமுக தனது பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த விசயத்திலும் காட்டி உள்ளது. இதற்கு பெண்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள், எனக் கூறினார்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!