பட்டுசேலை புரோக்கர் அடித்துக் கொலை…? ரத்த காயங்களுடன் ரயில்வே மேம்பாலம் அருகே சடலம் மீட்பு ; போலீசார் தீவிர விசாரணை..!!
Author: Babu Lakshmanan24 March 2023, 3:51 pm
காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் அருகே 36 வயதுடைய இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நாராயண பாளையத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மகன் பிரபாகர் (36). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரகாஷ் என்ற பட்டு சேலை கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ட்ரீசியன் தொழிலில் ஈடுபட்டு கொண்டே, ஆரணி போன்ற இடங்களில் பட்டுசேலை வாங்கி வந்து விற்பனை செய்தும் வருகிறார். அதேபோல் வாடிக்கையாளர்களின் பழக்கத்தினால் பட்டு சேலை புரோக்கராகவும் இருந்து வந்துள்ளார்.
திருமணமான சில மாதங்களிலேயே இவருடைய மனைவி கோமதி என்பவர் பிரிந்து சென்று விட்ட காரணத்தால், தனது பெற்றோர்களுடன் நாராயணபாளையம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற பிரபாகர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் இரத்த காயங்களுடன் வாலிபர் சடலம் இருப்பதாக பொதுமக்கள் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா காவல்துறையினர் ரத்த காயங்களுடன் இருந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் நாராயணபாளைய தெரு பகுதியினை சேர்ந்த பிரபாகர் என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் அவரது வீட்டில் சென்று இத்தகவலை உறுதி செய்தனர்.
ரத்த காயங்களுடன் இருந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மோப்பநாய் புதிய ரயில்வே நிலையம் அருகே வரை சென்று விட்டு திரும்பியது. பிரபாகர் காயங்களுடன் இறந்தது குறித்து அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாகர் தலையின் இரண்டு இடத்தில் காயங்கள் இருப்பதால் கடன் தொல்லை காரணமாக யாராவது அடித்துக் கொன்றார்களா? அல்லது போதையில் விழுந்து அங்கிருந்து கல் குத்தி இறந்து போனாரா என்ற ரீதியிலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.