டாஸ்மாக் வருமானத்தை வைத்து நீங்க கொடுக்கும் இலவசம் வேண்டாம் : கொந்தளித்த இயக்குநர் பேரரசு!!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2023, 7:00 pm
மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது தெருக் கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். ஆடியோ விழாவில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இயக்குநர் பேரரசு கூறுகையில் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் யார் என பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள், படம் என்ன மாதிரியான கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள்.
முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம். வீரப்பன் மகளும் சினிமாவில் நடிக்கலாம். சினிமா யாரையும் ஏற்றுக் கொள்ளும்.
தெருக்கூத்து அழிந்து கொண்ட வருகிறது என்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களை, குடிப்பவர்கள் ஆடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
விஜய், பிரபுதேவா ஆகியோரை விட குடிமகன்கள் சூப்பராக ஆடுகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதே மதுவை கொடுத்துதான் ஓட்டு போட சொல்கிறார்கள். இந்த படத்தில் ஆலய மணி எழுதிய பாடலான சாராயம் அபாயம் என்பது நமக்கான அபாய மணியாகும். இந்த பாடலை டாஸ்மாக் கடைகள் முன்பு ஒலிக்கப்பட்டு கூட மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யலாம்.
மதுவிலக்கு கொண்டு வந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும் போது போதை பொருட்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை.
மதுவை விற்கலாம் என்றால் இனி வரும் நாட்களில் டாஸ்மாக்கை போல கஞ்சா கடையும் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஆன்லைன் ரம்மியால் எங்கேயோ எப்போதோ ஓரிருவர் இறக்கிறார்கள். ஆனால் மதுவால் தினமும் இறப்பு சம்பவம் ஏற்படுகிறது.
ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்காக சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள், ஏன் மதுவை ஒழிக்க குரல் கொடுக்கவில்லை? அதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். பெண்களுக்கு இவர்கள் கொடுப்பதாக சொல்லும் ரூ 1000 தேவையில்லை.
இவர்கள் அறிவித்த ஓசி பஸ்ஸும் தேவையில்லை. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என கூறுகிறீர்கள். ஏழை மாணவர்கள் நீட் தேர்வு எழுத நீங்களே ஏன் நீட் பயிற்சி அளிக்கக் கூடாது?
டாஸ்மாக் வருமானம்தான் அதிகமாக வருகிறது. எனவே அந்த காசில் மக்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம். அதன் மூலம் பாவத்தை மக்கள் தலையில் ஏற்ற வேண்டாம்.
இந்த மாவீரன் பிள்ளை படம் சமுதாயத்திற்கு எடுக்கப்பட்ட படம் என்றார். வீரப்பன் மகள் விஜயலட்சுமிக்கு நடிக்க வேண்டும் என்பது சிறு வயது விருப்பமாக இருந்ததாகவும் அது இப்போது நிறைவேறியதாகவும் தெரிவித்தார்.