எடியூரப்பா வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த அமித்ஷா… சாப்பாட்டுடன் பரிமாறப்பட்ட அரசியல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2023, 9:07 pm

எடியூரப்பா வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த அமித்ஷா… சாப்பாட்டுடன் பரிமாற்றப்பட்ட அரசியல்!!!

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வராக பாஜகவின் பசவராஜ் பொம்மை பதவி வகித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது கர்நாடக சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. வரும் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது இருந்தே மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், கர்நாடக தேர்தலையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்க உள்ளது.

பாஜக மேல் மட்ட தலைவர்கள் அடிக்கடி கர்நாடக மாநிலத்திற்கு விசிட் அடித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடிக்கடி விசிட் அடிக்கின்றனர்.

இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, தேசிய பாதுகாப்பு குறித்த தென்மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக மாநிலத்திற்கு நேற்று வருகை தந்து இருந்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் குமரகிருபா ரோட்டில் உள்ள எடியூரப்பாவின் காவேரி இல்லத்திற்கு அமித்ஷா வருகை தந்தார். அவரை எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அமித்ஷாவிற்கு எடியூரப்பா வீட்டில் காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அமித்ஷாவுடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமித்ஷாவுக்கு விஜயேந்திராவே சிற்றுண்டியை பரிமாறினார். இந்த சிற்றுண்டி சந்திப்பில் கர்நாடக சட்டசபை தேர்தல் நிலை குறித்தும், வரும் நாட்களில் எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். மாநில தலைவர்கள் பிரசார உத்தியை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகளை அமித்ஷா அப்போது வழங்கினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜேயந்திரா, அமித்ஷாவுடனான சிற்றுண்டி சந்திப்பின் போது அரசியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். இது குறித்து விஜேயந்திரா கூறுகையில், வரும் தேர்தலில் தொங்கு சட்டசபை வந்து விடக்கூடாது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்றார்.

மேலும், சித்தராமையா போட்டியிடும் வருனா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஜேயந்திரா, தனது தந்தையின் ஷிகாரிபுரா தொகுதியில் தான் கவனம் செலுத்துவதாகவும் எனினும் எந்த தொகுதியில் போட்டி என்பது குறித்து மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் கூறினார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!