ஒரே மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதிய 700 பேர் பாஸ்.. எப்படி சாத்தியம்? சந்தேகத்தை கிளப்பிய ராமதாஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2023, 5:16 pm
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 700 பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒரு தேர்வு மையத்தில் இத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருப்பது முறைகேடுகள் நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட TNPSC போட்டித் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள நடுவத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.
அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது.
வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.
நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு பாமக தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.