‘தெரியாம வந்துட்டேன்’ புடவையின் கலரால் பாஜக எம்எல்ஏ வானதிக்கு நேர்ந்த சோகம்… கிண்டல் செய்த காங்கிரஸ் : சட்டப்பேரவையில் கலகல..!!
Author: Babu Lakshmanan27 March 2023, 1:17 pm
சட்டப்பேரவைக்கு கருப்பு புடவை அணிந்து வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ந்து போன சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது.
2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு சமூகத்தினரை அவதூறாக பேசியதாக 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கருப்பு ஆடை அணிந்து வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அந்த வகையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர். மேலும், ராகுல் காந்திக்கு ஆதரவாக பாதகைகளையும் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகளை கலந்து கொள்ள வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வந்ததை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் பதிவு செய்தனர். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, ‘என்ன, எங்களுக்கு ஆதரவா..?’ என நக்கலாக கேள்வி எழுப்பினார்.
இதனைக் கேட்ட வானதி சீனிவாசன் ” தெரியாமல் இன்று கருப்பு புடவை அணிந்து வந்து விட்டேன்” என புன்னகைத்தபடியே உள்ளே சென்றார்.