தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு மேட்டூர் கெண்டை மீன் விருந்து : அசத்திய பாமக எம்எல்ஏ!!!
Author: Udayachandran RadhaKrishnan29 மார்ச் 2023, 7:31 மணி
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மேட்டூத் அணையில் கிடைக்கும் மீன்களை வைத்து விருந்து வைக்க பாமக எம்எல்ஏ சதாசிவம் விரும்பினார்.
இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒரு டன் மீன்களை சென்னைக்கு கொண்டு வந்த எம்எல்ஏ, காவிரி ஆற்றுப்படுகையில் விளையும் புழுங்கல் அரிசியை கொண்டு, சேலத்தில் பிரபலமான சமையல் கலைஞர்களை அழைத்து வந்தார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சமூக நல கூடத்தில் அரிசி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், மீன் ரசம், முட்டை ஆகிய உணவுகள் சமைத்து விருந்து தயாரித்துள்ளார்.
அவை மிக நேர்த்தியான பாக்ஸ்களில் பார்சல் செய்யப்பட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்ட 500 நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே அனுப்பி வைத்தார் சதாசிவம்.
மீன் உணவை ரசித்தும் ருசித்தும் சாப்பிட்டவர்கள், மேட்டூர் அணையின் மீன்களுக்கு தனி ருசிதான் என்று சதாசிவத்தை பாராட்டியுள்ளனர்.
இந்த உணவு தயாரிப்பதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அப்போது மேட்டூர் எம்எல்ஏவாக இருந்த ஜிகே மணி இதே போல் மீன் விருந்து கொடுத்துள்ளார். அதே பாணியை தற்போது எம்எல்ஏ சதாசிவம் கடைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0