விழுப்புரம் கொலை சம்பவம்… குடும்ப சண்டை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து செல்ல முடியாது : அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
30 March 2023, 6:59 pm

விழுப்புரம் கொலை சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகராறு செய்ததை வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் (45) மற்றும் அரசமங்கலத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் தீபக் (23) ஆகியோர் தட்டிக் கேட்டனர். ஆத்திரமடைந்த வாலிபர்கள் இப்ராகிம், தீபக் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். இதில், இப்ராகிம் வயிற்றிலும், தீபக் முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தப்பியோட முயன்ற வாலிபர்களை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். இதில் மருத்துவமனைக்கு சென்ற இப்ராஹிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த ஞானசேகர் மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது, இது குடும்பப் பிரச்சனையால் கொலை நடந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வணிகர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- விழுப்புரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் இப்ராஹிம் ராஜா என்ற சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனால், சட்டசபையில் குடும்பச் சண்டை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு குற்றச் சம்பவங்களும், குடும்பச் சண்டை என்ற அளவில் குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது. ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் கடந்து செல்ல முடியாது. பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறும், கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வரும் திமுக கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்க தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 400

    0

    0