வரலாறு காணாத விலையில் தங்கம் விலை உச்சம் : அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan31 March 2023, 10:06 am
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. குறிப்பாக, மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்து வந்தது. புதிய உச்சமாக ரூ.44 ஆயிரத்தையும் கடந்து விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,720க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,590க்கு விற்பனையாகிறது.
நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. வரலாறு காணாத புதிய விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.