10, 15 பேரை வெச்சிட்டு இப்படியா? நாங்க ஒண்ணு சேர்ந்தால் உங்க நிலைமை என்னவாகும்? காங்கிரஸ்க்கு பாஜக எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2023, 3:29 pm
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாகவும், எம்பி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரசார் 20-க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து பாஜகவினர் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை அவர்கள் கொண்டுவந்த காங்கிரஸ் கொடிகளை கொண்டு அடித்து விரட்டினர்.
காங்கிரஸ் கொடிகளை பாஜகவினர் எரித்தனர். அதை தடுக்க வந்த போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தாக்குதலில் காயம்பட்ட இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளர் லாரன்ஸ் மற்றும் பாஜக சக்திகேந்திரா கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் ஆகிய இருவர் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவினர் நாகர்கோவில் – கன்னியாகுமரி சாலையில் நாகர்கோவில் எம்எல்ஏ எம்ஆர் காந்தி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தனது ட்விட்டரில், நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரசார் நடத்திய அமைதிப் பேரணியை சீர்குலைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் அதன் மாவட்டத் தலைவர் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.
அறவழிப் போராட்டத்தை எதிர்க்க வன்முறையை தூண்டி விட்ட இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், அறப்போராட்டமா ?! கட்சி அலுவலகம் முன்பு கலாட்டா செய்வது அறப்போராட்டமா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வன்மத்தோடு விமர்சித்த ராகுலுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கும் பாஜகவிற்கும் என்ன சம்பந்தம் ?! அறிவுக்குறைபாடு கொண்ட காங்கிரஸ்காரர்களுக்கு இது எப்படி புரியும்.
பத்து பதினைந்து பேர வைத்துக்கொண்டு உங்களுக்கே , இவ்வளவு இருந்தா , ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் காங்கிரஸ் அலுவலகங்களை வந்து முற்றுகையிட்டால் உங்கள் நிலை என்னவாகும் என யோசித்து பாருங்கள் என விஜய் வசந்த்தை டேக் செய்து விமர்சித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.