சோதனையில் கொத்து கொத்தாக சிக்கிய நகைகள்… வருமான வரித்துறையிடம் ரூ.8 கோடி மதிப்பிலான தங்க நகைகள் ஒப்படைப்பு.. சென்னையில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan4 April 2023, 3:58 pm
சென்னை : சென்னையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 8 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று காலை ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஏலாவூர் சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அதனை சோதனை செய்தபோது, மூன்று பைகளில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அதனை கொண்டு வந்த சேலம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், காளிமுத்து ஆகிய இருவரிடமும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் விசாகப்பட்டினம் பகுதிக்கு சென்று தங்க நகைகளை மாடல் காண்பித்து விட்டு மீண்டும் சேலம் செல்வதற்காக சென்னை வந்ததும், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை கையாண்டதும் தெரிய வந்தது.
பின்னர், எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 14 1/2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை வியாசர்பாடி போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சேலம் பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வரும் நபர்கள், அதன் மேலாளர் சரவணனிடம் கொடுத்து விசாகப்பட்டினத்திற்கு சென்று ஆர்டர் எடுத்தது வரும்படி கூறி அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.