பாமக கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக தப்பிய அன்புமணி ராமதாஸ்..!!
Author: Babu Lakshmanan5 April 2023, 5:58 pm
சேலம் அருகே பாமக பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் அன்புமணி ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் பேருந்து நிலையம் வந்த அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவிட்டு மேடை அருகே வந்தார்.
அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக திடீரென அனைவரும் மேடை மீது ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை சுதாரித்துக் கொண்ட அன்புமணி ராமதாஸ், மேடையில் இருந்து தாவி கீழே குதித்தார். இதனால், எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் சிறிய அளவு டேபிள் மூலம் உயரமாக நின்று தனது பொதுக்கூட்ட பிரச்சாரத்தை அன்புமணி ராமதாஸ் தொடர்ந்தார்.