ஓடும் பேருந்தில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… அலறியடித்து ஓடிய பயணிகள் : திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 7:47 pm

திண்டுக்கல் : நத்தம் அருகே ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமயந்தி (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீக சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

சொத்துப் பிரச்னை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்குரைஞரை சந்திப்பதற்காக தமயந்தி திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார். உலுப்பக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்தில் தமயந்தி ஏறுவதை பார்த்து, அதே பேருந்தில் ராஜாங்கமும் தனது 14 வயது மகனுடன் ஏறினார்.

அந்தப் பேருந்து கோபால்பட்டி அடுத்துள்ள வடுக்கப்பட்டி அருகே வந்தபோது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியை ராஜாங்கம் குத்தினார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக பேருந்தின் ஓட்டுநர் விஜய் பேருந்தை நிறுத்தினார். இதனிடையே ராஜாங்கம், மகனை விட்டுவிட்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடினார்.

பலத்த காயமடைந்த தமயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று தமயந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தமயந்தியின் 2 மகன்களில் ஒருவர் நிகழாண்டு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 2ஆவது மகன் வியாழக்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் பாடத் தேர்வை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!