மண்டேலா படம் போல இரு கிராமங்களுக்கு இடையே தகராறு… பஞ்சாயத்து அலுவலகத்தால் எழுந்த மோதல் : பதற்றம்…. போலீசார் குவிப்பு..!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 8:55 pm

துத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே கே.கைலாசபுரத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது கே.கைலாசபுரம். மேலும், கீழக்கோட்டை ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவராக சுமார் 50 வருடங்களாக கே.கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராக உள்ளார். மேலும் பஞ்சாயத்து அலுவலகம் ஆனது கே.கைலாசபுரத்தில் இருந்து வருகிறது.

தற்போது பஞ்சாயத்து அலுவலகம் ஆனது பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், புதிய பஞ்சாயத்து அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதை கீழக்கோட்டை கிராமத்தில் அமைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கே.கைலாசபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இது தொடர்பாக சிறு சிறு பிரச்சனைகளும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே பயிற்சி கபாடி போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கீழக்கோட்டை கிராமத்தில் வைத்து நடந்துள்ளது. அப்போது, இரு அணியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டு முன் பகை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கே கைலாசபுரம் சந்தி மரிச்சம்மன் கோவில் அருகே கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் கே. கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் (18) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், பிரித், அஜய், சிவபாரத் மற்றும் கீழக்கோட்டையைச் சேர்ந்த சண்முகவேல், துரைராஜ் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கீழக்கோட்டையைச் சேர்ந்த சண்முகவேல், துரைராஜ் உள்ளிட்ட 15 நபர்கள் மீதும், சண்முகவேல் அளித்த புகாரின் பேரில் கீர்த்தி வாசன், அஜய் பிரித், கார்த்திக் உள்ளிட்ட 18 நபர்கள் மீதும் நாரைக்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் மணியாச்சி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 415

    0

    0