Vintage RCB.. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரூ படுதோல்வி ; கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!!
Author: Babu Lakshmanan7 April 2023, 8:45 am
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரூ அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் (3), மந்தீப் சிங் (0), நிதிஷ் ரானா (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய குர்பாஷ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸலும் ரன் எதுவும் இன்றி அவுட்டானார். இதனால், கொல்கத்தா அணியின் நிலைமை அவ்வளவு தானா என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், ஷர்துல் தாகூர், ரிங்கு சிங் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் சிக்சருக்கும், பவுண்டருக்கும் பந்துகளை பறக்கவிட்டனர். இதனால், 20 பந்துகளில் ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த ராஜஸ்தான் அணி வீரர் பட்லரின் சாதனையை ஷர்துல் தாகூர் சமன் செய்தார்.
ஷர்துல் தாகூர் (68), ரிங்கு சிங் (46)வின் அதிரடியால் கொல்கத்தா அணி, பெங்களூரூவுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
இதைத் தொடர்ந்து, கடினமான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரூ அணிக்கு, இந்த முறையும் தொடக்க வீரர்களான கேப்டன் டூபிளசிஸ் மற்றும் விராட் கோலி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடிய போதும், 44 ரன்னில் விராட் கோலி (21) ஆட்டமிழந்தார். தொடர்ந்து டூபிளசிஸும் (23) விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து, வந்த மேக்ஸ்வெல் (5), ஹர்சல் படேல் (0), ஷபாஷ் அகமத் (1), பிரேஸ்வெல் (19), தினேஷ் கார்த்திக் (9), அனுஷ் ராவத் (1), கரண் சர்மா (1) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், 100 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரூ அணி தடுமாறியது. இறுதியில் டேவிட் வில்லி (20 நாட் அவுட்), ஆகாஷ் தீப் (17) ஓரளவுக்கு ரன்களை சேர்க்க, பெங்களூரூ அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. அதாவது, 17.4 ஓவர்கள் முடிவில் அந்த அணி 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம், 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், இளம் வீரர் சூயஷ் ஷர்மா 3 விக்கெட்டுக்களும், சுனில் நரேன் 2 விக்கெட்டுக்களும், ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஒருமுறையை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரூ அணி இந்த முறை கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கையில் அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்றாற் போலவே, முதல் போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது பெங்களூரூ அணி.
ஆனால், மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், #Vintage RCB என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.