தமிழகம் வரும் பிரதமர் மோடி பயணத்தில் திடீர் மாற்றம் : மெரினாவில் குவியும் போலீஸ்… பரபரப்பு தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2023, 1:54 pm
பிரதமர் மோடி நாளை சென்னை வரும்போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
போலீஸ் தடையை மீறி மெரினாவில் விவேகானந்தர் இல்லம் அருகே ரகசியமாக இதற்கு ஏற்பாடு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மெரினா கடற்கரையில் பதுங்கி இருந்து திடீரென விவேகானந்தர் இல்லம் நோக்கி வரவாய்ப்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்தே மெரினாவிற்கு மக்கள் செல்ல நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் இல்லம் தவிர, சென்னையில் பிரதமர் மோடி மீனம்பாக்கம், சென்ட்ரல், பல்லாவரம் ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
இந்த 4 இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்த முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசாருக்கு பதில் 26 ஆயிரம் போலீ சாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர்.
பிரதமர் மோடி சென்னையில் விமான நிலையம் தொடங்கி நீண்ட தொலைவுக்கு சாலை மார்க்கமாக நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். பல இடங்களில் மிகப்பெரிய அகலமான சாலைகள் வழியாக செல்ல ஏற்பாடு செய் யப்பட்டிருக்கிறதாம்.
அந்த சாலைகளில் திடீரென காங்கிரஸ் கட்சியினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கருப்புக் கொடி காட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பாதுகாப்பு பணி போலீசாருக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்தே பாதுகாப்பிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் போடப்பட உள்ளனர்.
மெரினா கடற்கரையை நாளை காலை முதலே சீல் வைத்து தேவையில்லாதவர்கள் நடமாட் டத்தை தடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மெரினா கடற்கரை திறந்தவெளி பகுதி என்பதால் நாளை மதியத்துக்கு பிறகு மக்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் மெரினா கடற்கரைக்கு நாளை வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனிடையே நாளை மறுநாள் முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். பிரதமர் மோடியின் பயணம் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதுமலையில் உள்ள தங்கும் விடுதிகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நான்கு நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதுமலைக்கு வரவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு நாளை வருகிறார். நாளை சென்னை வரும் பிரதமர் சென்னை விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.
இதற்காக ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் மதியம் 3 மணியளவில் வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.
தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், மாலை 4 மணியளவில் சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலையும், தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த பயணத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதன் காரணமாகவே மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
0
0