பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை… ரூ.3,700 கோடியிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் ; சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
Author: Babu Lakshmanan8 April 2023, 8:32 am
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 2.45 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்க உள்ளனர்.
பின்னர், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். விழா முடிந்து பிற்பகல் 3.50 மணியளவில் ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேட் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறர். வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
மாலை 4 மணியளவில் சென்டிரல் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடி, சென்னை – கோவை ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு சென்று, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
ஒரு மணிநேர நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி பின்னர் மீண்டும் அடையார் ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு மாலை 5.55 மணியளவில் வருகிறார். அங்கிருந்து புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். அங்கு புதிய ரயில் சேவைகள், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
பின்னர், இரவு 7.30 மணிக்கு வரை ஒரு மணி நேரம் நடக்கிறது. சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு, இரவு 8.40 மணியளவில் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லும் பிரதமர் மோடி, இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காலை 9.35 மணியளவில் வருகை தந்து சுற்றி பார்க்கிறார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தம்பதியை சந்தித்து பேச இருக்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்ற உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கையை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.