டாஸ்மாக்கை நடத்தும்போது இது முடியாதா, என்ன?…திமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் சுளீர்!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2023, 7:02 pm
கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் பெருமளவில் கடத்திச் செல்லப்படுவதாக
சமூக நல ஆர்வலர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
கனிமவளங்கள் கொள்ளை
குறிப்பாக சொல்லப்போனால் மணல், கிரானைட் கற்கள், எம். சாண்ட் போன்றவை அதிகமாக கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாக, சமூகத்தை பாதிக்கும் எந்தவொரு பிரச்சனை என்றாலும் எங்கள் கட்சிதான் முதலில் வெகுண்டு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என்ற மார்தட்டிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் இந்த கனிம வள கொள்ளை குறித்து திமுக அரசை நோக்கி இதுவரை பெரிய அளவில் எந்த கேள்வியையும் எழுப்பியது இல்லை.
ஆனால் இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் கடந்த சில வாரங்களாக கொந்தளித்துப் போய் ஆங்காங்கே போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்க தொடங்கி இருக்கின்றனர். இதனால்தான் என்னவோ வேறு வழியின்றி திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் இந்த விவகாரத்தில் முதல் முறையாக தனது மவுனத்தை கலைத்து இருக்கிறது.
கே பாலகிருஷ்ணன் கண்டனம்
திமுக ஆட்சியில் கனிம வளங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்திச் செல்லப்படுவதாகவும் அதை திமுக அரசு தடுக்க தவறி விட்டதாகவும்
பகிரங்கமாகவே குற்றம்சாட்டியும் உள்ளது.
அதுவும் மார்க்சிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவுக்கு கனிம வளங்கள் அதிகமாக கடத்தி செல்லப்படுவதை தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் ஒப்புக் கொண்டிருப்பதுதான்
இதில் மிகுந்த ஆச்சர்யம் அளிக்கும் விஷயம்.
அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை இல்லை
செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தில் கனிம வளங்கள் அதிக அளவில் கொள்ளை போகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கற்கள் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு சுற்றியுள்ள நான்கு, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிலும் கல் குவாரி நடக்கிறது.
3 மீட்டர், 4 மீட்டர் ஆழத்திற்கு கனிம வளத்தை எடுத்துக்கொள்ள அரசாங்கம் அனுமதித்தால் இவர்கள் 30 மீட்டர் குழி தோண்டி கற்களை அள்ளுகிறார்கள். இந்த அனுமதியையும் மீறி மரபுகளையும் மீறி எப்படி தனியார் கனிம வளங்களை எடுக்கிறார்கள்?…
இதெல்லாம் கனிம வளத்துறை அதிகாரிகள், தாசில்தார்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அத்தனை பேருக்குமே நன்றாக தெரிகிறது. ஆனால் நடவடிக்கைதான் எடுப்பதில்லை. விதிகளை மீறும் இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறீர்கள்?…
தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்!!
தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. நமது பக்கத்து மாநிலமான கேரளாவிற்கும் கொண்டு செல்கிறார்கள். கேரளாவில் மலைகள் நிறைய இருப்பதால் நம்மை விட கனிம வளம் அவர்களுக்குத்தான் அதிகம். ஆனாலும் கனிம வளங்களை எடுக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. ஏனென்றால் சுற்றுப்புறச்சூழலை மிகுந்த கவலையோடு கேரள அரசு பார்க்கிறது.
தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை போகாமல் இருக்க, அந்த வியாபாரத்தை அரசாங்கமே மொத்தமாக ஏற்று நடத்தவேண்டும். இதனால் தமிழக அரசுக்கு நல்ல வருவாயும் கிடைக்கும். டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழக அரசால் நடத்த முடிகிறபோது, கனிமவள வியாபாரத்தை மட்டும் நடத்த முடியாதா என்ன? இது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா?…
இருக்கிற கனிம வளங்களை எல்லாம் இப்போதே ஒட்டு மொத்தமாக எடுத்து விட்டால் நான்கு, ஐந்து வருடங்கள் கழித்து எங்கே போவது? அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாம் என்ன செய்வது?…எனவே தனியாருக்கு உரிமம் கொடுத்து கனிம வளமங்கள்
அளவு கடந்து கொள்ளை போவதை தமிழக அரசு தடுக்கவேண்டும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.
போராட்டம் குறித்து மழுப்பல்
எனினும் “முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்த நீங்கள் திமுக ஆட்சியில் அதுபோல எதுவும் நடத்தியது போல் தெரியவில்லையே?” என்ற செய்தியாளர்களின் கிடுக்குப்பிடி கேள்விக்கு பாலகிருஷ்ணன் சற்று மழுப்பலாகவே பதில் அளித்தார்.
“மின் இணைப்பு உள்ளவர்கள் எல்லாம் ஆதாரை மின்வாரியத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு இணைப்பு பணிகள் முடிவடைந்த பின்பு ஒரு வீட்டில் மூன்று மின் இணைப்புகள் இருந்தாலும் அவை தனித்தனியாக கணக்கிடப்பட மாட்டாது. ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புதான் என்று தமிழக மின் வாரியம் மின் நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பியபோது அதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தது நாங்கள்தான். அதன் பிறகுதான் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்தத் திட்டத்தை மறுத்ததோடு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை தமிழக அரசு அறிவித்தபோது நாங்களும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதற்காக முரசொலி நாளிதழ் எங்களை கடுமையாக தாக்கி கட்டுரையும் வெளியிட்டது” என்று கே பாலகிருஷ்ணன் பதில் அளித்தார்.
ஆனால் அரசியல் பார்வையாளர்களின் பார்வையோ இதில் வேறு விதமாக உள்ளது.
கண்துடைப்பு நாடகம்
“திமுக கூட்டணியில் பாஜகவை எதிர்ப்பதுதான் எங்கள் முதல் இலக்கு என்று கூறும் மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் மக்களை கடுமையாக பாதிக்கும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண அதிகரிப்பு போன்ற விவகாரங்களில் பெயரளவுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்தின என்பதுதான் உண்மை. ஏனென்றால் கடந்த ஆண்டு சொத்து வரி 150 சதவீதமும், மின் கட்டணம் 53 சதவீதமும் உயர்த்தப்பட்டது. இது தவிர இந்த இரண்டிலும் இனி வரும் ஆண்டுகளில் வருடத்திற்கு 6 சதவீதம் தானாகவே கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் இந்த கூடுதல் கட்டண உயர்வு பற்றி திமுக கூட்டணி கட்சிகள் இதுவரை வாயே திறக்கவில்லை. ஒரு சில பிரச்சினைகளுக்காக மார்க்சிஸ்ட் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் கூட அது கண் துடைப்பு நாடகம் போலவே உள்ளது.
கண்டனம் தெரிவிக்காத கூட்டணிக்கட்சிகள்
குறிப்பாக முரசொலி கண்டனம் தெரிவித்த பிறகு மின் கட்டண உயர்வு பற்றி மார்க்சிஸ்ட் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படியே கப் சிப் ஆகிப் போனது.
அதேநேரம் மின்வாரியத் துறை அதிகாரி, ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு தான் என்று கூறும் நோட்டீசை தன்னிச்சையாக தயாரித்து அனுப்பி இருக்க வாய்ப்பே இல்லை. தவிர மின்வாரியத்திடம் அப்படியொரு திட்டமே இல்லாத நிலையில் மின்வாரிய அதிகாரி, தானே அதைச் செய்திருக்க மாட்டார் என்பதும் நிச்சயம். அதனால் அந்த அதிகாரி பலிகடா ஆக்கப்பட்டதுதான் மிச்சம். இதை மார்க்சிஸ்ட் கண்டித்த மாதிரி தெரியவில்லை.
நீர்த்துப்போகும் வேங்கைவயல் விவகாரம்?
அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் சமூக நீதி காக்கும் கட்சிகள் என்று தங்களை கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட், விசிக இப்போது வரை மௌனம்தான் காக்கின்றன. இதனால் இப்பிரச்சனை காலப்போக்கில் நீர்த்துப்போகும் வாய்ப்புகளே அதிகம். அதைத்தான் இந்த கட்சிகளும் விரும்புகின்றன போலும்!
இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையை கண்டிக்கவோ, எதிர்த்து போராடவோ மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட்,மதிமுக கட்சிகளுக்கு மனமே இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.
அதேபோல் நெல்லை மாவட்டத்தில் போலீசாரின் காவலில் இருந்த விசாரணை கைதிகள் ஒன்பது பேரின் பற்கள் கற்களால் தட்டி, கொரடால் பிடுங்கப்பட்ட இன்னொரு கொடூர சம்பவம் குறித்து இதுவரை எந்த தீவிர போராட்டத்தையும் இந்தக் கட்சிகள் முன்னெடுக்கவில்லை.
அது மட்டுமல்ல கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 14 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒதுங்கிப் போகும் கூட்டணி கட்சிகள்
முந்தைய அதிமுக ஆட்சியின்போது சாத்தான் குளத்தில் தந்தை- மகன் போலீசால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கொந்தளித்து தொடர் போராட்டங்களை நடத்தின. ஆனால் இப்போதே எதுவும் பேசாமல் அமைதி காக்கின்றன. பாஜகவை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதால்தான் திமுகவின் தலைமையை நாங்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம் என்று மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சம்பந்தமே இல்லாமல் என்னதான் காரணம் கூறினாலும் தமிழக மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அதையே சாக்காக வைத்து போராட முன் வராமல் ஒதுங்கிக் கொள்வது சரியான செயல் அல்ல.
அது இக்கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பகத்தன்மையை வெகுவாக குறைத்து விடும் என்பதுதான் எதார்த்தமான உண்மை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.