அண்ணாமலை அறிவிப்புக்கு பிறகு கூடிய கூட்டம்… பாஜகவினர் இடையே கோஷ்டி மோதல் ; நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு
Author: Babu Lakshmanan13 April 2023, 2:08 pm
ராமநாதபுரம் ; இராமநாதபுரம் மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டு நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவித்தார். மேலும், பழைய மாவட்ட தலைவர் கதிரவனை நீக்கி விட்டு, புதிய மாவட்ட தலைவராக தரணி முருகேசன் என்பவரை நியமித்திருந்தார். இந்த சம்பவம் மாவட்டத்தில் சற்று பேசு பொருளாக இருந்தது
இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது, புதிய மாவட்ட தலைவரை அறிமுகப்படுத்தி வைத்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த சூழ்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த முன்னாள் மாவட்ட தலைவரின் ஆதரவாளரான பாலா, அங்கிருந்த நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டு அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர்.
பிறகு அங்கிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட பாலாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். புதிய மாவட்ட தலைவரை நியமித்து முதல் அறிமுக கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு பாஜகவினரிடைய பரபரப்பு ஏற்பட்டது.