ஏரியில் கால் தவறி விழுந்த 9 வயது அண்ணன்.. காப்பாற்ற சென்ற தங்கையும் நீரில் மூழ்கி பலி ; பாசத்திற்காக பறிபோன பிஞ்சு உயிர்கள்..!!
Author: Babu Lakshmanan18 April 2023, 9:31 am
பரந்தூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் ஏரியில் கால் கழுவ சென்று நீரில் விழுந்த அண்ணனை காப்பாற்ற சென்ற தங்கையும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அடுத்துள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கர் என்பவருக்கு விஜய் (வயது 9), பூமிகா (வயது 8) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் நெல்வாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜய் நான்காம் வகுப்பும், பூமிகா மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இருவரும் பள்ளி முடிந்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பெற்றோர்களை பார்க்க சென்று உள்ளனர். அங்கு இயற்கை உபாதை கழித்துவிட்டு அருகில் உள்ள ஏரியில் கை, கால்களை கழுவ சென்று உள்ளனர். விஜய் துணிமணிகளை கழற்றி வைத்து விட்டு நீரில் கால்கள் கழுவ சென்ற போது தவறி விழுந்ததாகவும், அதைக் கண்ட பூமிகா உடனே ஓடி சென்று அண்ணனை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும், அதில் இரண்டு பேரும் நீரில் முழ்கி இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோர் நீண்ட நேரமாக குழந்தைகள் இருவரும் வராததால் சந்தேகம் அடைந்து சென்று பார்த்த பொழுது, இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்து போனது தெரிய வந்தது. உடனடியாக குழந்தைகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு இரு குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர் என தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தைகள் இருவரையும் நெல்வாய் கிராமத்திற்கு கொண்டு சென்று, இரு குழந்தைகளையும் அருகருகே வைத்து தாய், தந்தை, பாட்டி மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரின் கண்களையும் கலங்கடித்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர், சடலத்தை கொடுக்க மறுத்த பெற்றோரிடமும் கிராம மக்களிடமும் பேசி உயிரிழந்த விஜய், பூமிகா ஆகிய இரு குழந்தைகளின் உடலைகளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை என இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.