வழக்கு போட்டால் போடுங்க? நாங்களும் தயார் : அண்ணாமலைக்கு அமைச்சர் கேஎன் நேரு சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 10:29 am

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” திருச்சியில் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. அவ்விடத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 8நாட்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதில் 325-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் ஏறத்தாழ 12ஆயிரம் சதுர அடி அரங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. உழைப்பே மந்திரம் முன்னிறுத்தி முறையாக படியேறி முதல்வரான மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை புகைப்படங்கள் வாயிலாக முறைப்படுத்தப்பட்டு இந்த கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறைகள் அனைவரும் உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற அடிப்படையில் உயர்ந்த முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்ட திமுகவினர் முன்னெடுத்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சென்னை அரசு ஆர்ட்ஸ் மற்றும் நடிகர் – கவிஞர் ஜோ மல்லூரியின் ஒருங்கிணைப்பில் இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி காலை 9மணிக்கு செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை இளைய நடிகர் திலகம் பிரபு அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.

தொடர்ந்து 8 நாட்களும் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விமல், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மற்றும் இயக்குனர் லிங்குசாமி போன்றோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாள் மாலையிலும் 6மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த கண்காட்சி நடத்தப்படுவது நோக்கம் தமிழகத்தில் அநேக முதலமைச்சர்கள் ஆட்சி செய்துள்ளனர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலமும் உழைப்பும் இருந்துள்ளது.

அதேபோல் தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய தமிழக முதல்வர் கடந்த 40ஆண்டு காலமாக தன்னுடைய உழைப்பால் இந்த முதலமைச்சர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

எனவே, அவருடைய வாழ்க்கைப் பயணங்கள் அடங்கிய இந்த கண்காட்சியானது பல மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் அரசியல் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்றார். மேலும், திருச்சியின் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 35சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளனவருகிற டிசம்பர் மாதம் திறக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள கோவை, சேலம், திருச்சி ஆகிய சிறைச்சாலைகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன கோவை செம்மொழி பூங்காவாகும், சேலம் சிறை விளையாட்டு திடலாகவும், திருச்சி சிறைக்கு 173 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக ஆட்சியர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது விரைவில் ஒப்புதல் பெற்று சிறைச்சாலை மாற்றப்படும்.

திருச்சி காந்தி சந்தை (காந்தி மார்கெட்) அதே இடத்தில் 11கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு செயல்படும் என்றார்..

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர் தனக்கு மருத்துவமனை, கல்லூரி இருப்பதாக அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு எனக்கு அந்த மருத்துவமனையை வாங்கி தாருங்கள். அதை ஏழு மருத்துவர்கள் நடத்துகிறார்கள். கட்சி நடத்துவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் அண்ணாமலை என்றார்.

அண்ணாமலை வேண்டுமென்றால் வழக்கு தொடரட்டும் அதை சந்திக்க நாங்கள் தயார். அதேபோல் அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கவில்லை திமுகவின் திட்டங்களை தான் அதிமுக முடக்கியது என்றார்.

இந்த ஆய்வின்போது மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 387

    0

    0