மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு அரசுப் பேருந்தில் நடந்த அவலம் ; கொலை மிரட்டல் விடுத்த நடத்துநர்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
19 April 2023, 1:35 pm

சென்னை : அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனை ஏற்றாமல் பகிரங்க மிரட்டல் விடுத்து அரசு பேருந்து நடத்துநரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கக்கூடிய மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா என்ற கிரிக்கெட் வீரர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC TN01 / AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.

அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அப்போது பதிலளித்த சச்சின் சிவா இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என கூறியபோது, மாற்றுத்திறனாளி சிவாவை பார்த்து, ‘முகத்தை உடைத்துவிடுவேன், எனக்கு எல்லாம் தெரியும்’, என கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், இது குறித்து கேட்டபோது, ‘அப்படித்தான் பேசுவேன். உன்னை வண்டியில் ஏற்ற முடியாது’ எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துள்ளார்.

இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதிக்கு வந்த நடத்துனர், ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது,’ என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மாற்றுத்திறனாளி சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்றாமலேயே அப்படி விட்டுசென்றுள்ளார். மேலும், காவல்துறையினர் முன்பாகவே, ‘நீ மதுரைக்கு வா பார்த்துக்கொள்ளலாம்’ என கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து, மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்துள்ளார். ஒரு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கே இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால், மற்ற மாற்று திறனாளிகள், பார்வையற்றோருக்கு என்ன மாதிரியான நிலை அரசு பேருந்தில் ஏற்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

https://player.vimeo.com/video/819027692?h=5d9decb60b&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மேலும் இதுபோன்ற மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சச்சின் சிவா விடுத்திருந்தார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…