வீடு கட்டும் பணி ஆணை வழங்குவதில் மோசடி ; ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் உள்பட இரு திமுக நிர்வாகிகள் கைது!!

Author: Babu Lakshmanan
20 April 2023, 12:00 pm

காஞ்சிபுரம் ; சிறுமாங்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மானியத்துடன் தாமாக வீடு கட்டுவதற்காக வழங்கும் பணி ஆணையை போலியாக தயாரித்து 19 பயனாளிகளை ஏமாற்றிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும், கிளை செயலாளருமான கன்னியப்பன் உட்பட திமுகவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் தாமாகவே வீடு கட்டுவதற்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்குட்பட்ட சிறு மாங்காடு ஊராட்சிமன்ற தலைவராகவும், ஸ்ரீபெரும்புதூர் திமுக ஒன்றிய துணை செயலாளருமாக சுபரஞ்சனி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவருடைய கணவர் கன்னியப்பன் (39) திமுக கட்சியின் கிளைக் கழக செயலாளராக உள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் செயல்பட்டு வந்தார். வாசு (வயது 38) என்பவர் திமுக கட்சியின் பிரதிநிதியாக உள்ளார். இவருடைய மனைவி பிலோமினா ஐந்தாவது வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

கன்னியப்பன் மற்றும் வாசு ஆகிய இருவரும் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளரான அழகுபொன்னையாவை சந்தித்து, கடந்த 12 ஆம் தேதி சிறு மாங்காடு கிராமத்தில் 19 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பணி ஆணை கோப்புகள் கொடுத்துள்ளார்கள்.

அவற்றை பொறியாளர் அழகு பொன்னையா ஆய்வு மேற்கொண்டதில் அனைத்து பணி ஆணைகளும் போலியானது என தெரியவந்ததை அடுத்து, பொறியாளர் அழகு பொன்னையா காஞ்சிபுரம் மாவட்டம் குற்றப்பிரிவு அலுவலகத்தில், தான் பணிக்கு சேர்ந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து இதுவரை சிறு மாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் தன்னால் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் தன்னுடைய பெயரில் பணி ஆணை போலியாக தயாரித்து பயனாளிகளிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளதாக சிறுமாங்காடு கன்னியப்பன் மற்றும் வாசு ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி, குற்றப்பிரிவு குற்ற எண் 6/2023 பிரிவு 465, 468 ,471 ,420 IPC உட்பட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கன்னியப்பன் மற்றும் வாசு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • samantha talks about said not to junk food advertisement 20 வயசுல பண்ண தப்பு; கோடிக்கணக்கான பணம் போயிடுச்சு- ஓபனாக  பேசிய சமந்தா!