‘உதயநிதிக்கும், சபரீசனுக்கும் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து இருக்கு’.. நிதியமைச்சர் பிடிஆர் பேசும் ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!!
Author: Babu Lakshmanan20 April 2023, 1:08 pm
அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது உறவினர் சபரீசன் ஆகியோர் 30 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட திமுகவின் முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். சொத்துப்பட்டியல் வெளியானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது.
இதனிடையே, இந்த சொத்துப்பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறினார். மேலும், திமுகவின் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை கூறி வந்த நிலையில், திமுக சார்பில் ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
திமுகவின் இந்த நடவடிக்கைக்கு அண்ணாமலையும் பதிலடி கொடுக்கும் விதமாக, 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில், “உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில் அவர்களது மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சனையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது..? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது..? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, ஒரு தோராயமாக ரூ.30 ஆயிரம் கோடி இருக்கும், எனக் கூறியுள்ளார்.
மலைபோல திமுகவினர் சொத்துக்களை குவித்து வைத்திருப்பதாக பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அண்ணாமலை, தற்போது இந்த ஆடியோவை வெளியிட்டு திமுகவினருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.