திமுகவில் உருப்படியான ஒரு அமைச்சர் பிடிஆர் மட்டுமே… அவரையும் தூக்கிவிடுவார்கள் : சீமான் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 9:16 pm

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி. எஸ். ஆர். திரையரங்கில் ‘யாத்திசை’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சியினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 மணி நேர வேலை சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதனை கடுமையாக எதிர்ப்பேன். வேளாண்மையை அழிக்க வேளாண் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது.

மற்ற மாநிலங்களில் இல்லாதபோது முதன் முதலில் தமிழ்நாட்டில் ஏன் இந்த சட்டம் கொண்டு வர வேண்டும்? இதனை கேட்டால், நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம் என்பார்கள். பாஜகவின் கிளைக் கழகமாக (திமுக) இயங்குகிறது என கூறினார்.

தொடர்ந்து அவரிடம், சபரிசன், உதயநிதி பணம் சேர்த்து வைத்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், பழனிவேல் தியாகராஜன் அவரது தொகுதியில் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றவர். தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பவர்.

அவர் சொல்லாவிட்டால் இவர்கள் பணம் சேர்த்துள்ளது யாருக்கும் தெரியாதா? அந்தக் கட்சியில் இருப்பவர்களில் அவர் ஒருவர் தான் உருப்படி. அவரை தூக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அதுதான் வருத்தமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ. 40 பேரை தூக்க ஒவ்வொருவருக்கும் ரூ.150 கோடி கொடுக்கப்பட்டது. அதுலாம் ஊழல் இல்லையா? அதையெல்லாம் வெளியிட மாட்றீங்க. அதனை மறந்து விடுகிறீர்கள். ரஃபேல் விமான ஊழல் விவகாரத்தில் ராணுவ அமைச்சகத்தில் இருந்த கோப்புகளை காணவில்லை என்று கூறியவர்கள் நீங்கள்.

திமுகவில் இருப்பவர்கள் குறித்து வெளியிடுகிறீர்கள்‌. அப்படி என்றால் அதிமுகவில் இருப்பவர்கள் புனிதர்களா? நடுநிலையாக இருங்கள். இரண்டு பக்கமும் வெளியிடுங்கள் என்று தெரிவித்தார்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!