பிரதமர் மோடி இன்று கேரளா வருகை.. பாஜக தலைவருக்கு மலையாளத்தில் வந்த கடிதம்.. அலர்ட்டான போலீஸ்… உச்சகட்ட கண்காணிப்பு!!
Author: Babu Lakshmanan24 April 2023, 8:47 am
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். கொச்சியில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, திருவனந்தபுரத்தில் நாளை வந்தே பாரத் ரயில்சேவையை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க மாநில அரசின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், பாஜக சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், மாநில பா.ஜ.க தலைவர் சுரேந்திரனுக்கு மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று வந்திருந்தது. கொச்சியை சேர்ந்த ஜோணி என்பவர் பெயரில் வந்த அந்தக் கடிதத்தில் கேரளா வரும் பிரதமர் மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உள்ளதாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனால், அதிர்ந்து போன பாஜகவினர் உடனடியாக இது தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்தனர். இதைத்தொடர்ந்து, கேரள போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையில் இறங்கி, நேற்று மிரட்டல் கடிதம் எழுதியவரை மடக்கி பிடித்தனர். கொச்சியை சேர்ந்த சேவியர் என்ற அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொச்சியில் வர்த்தகம் செய்து வரும் இவர், ஜோணி என்பவர் மீது தனக்கிருந்த தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்காக, அவரை போலீஸில் சிக்க வைப்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை அறிவியல் பூர்வமாக விசாரித்து, கொலை மிரட்டல் கடிதம் எழுதியவரை கைது செய்துள்ளோம். இது ஒரு தனிப்பட்ட பகை தொடர்பானது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த நபரை போலீசார் கைது செய்ய வேண்டும் என குற்றவாளி விரும்பி இருக்கிறார்’ என தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.