அண்ணாமலை – அதிமுக மோதலுக்கு முற்றுப்புள்ளி..? டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி..!!
Author: Babu Lakshmanan27 April 2023, 11:07 am
டெல்லி ; டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
நேற்று இரவு 9 மணியளவில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கர்நாடகத் தேர்தல், பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்தும் அங்கு பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சம்பிரதாய அடிப்படையில் உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசியதாகவும், முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தற்போது வரை அதிமுக- பாஜக கூட்டணி தொடர்வதாகவும் கூறினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த தகராறும் இல்லை என தெரிவித்தார்.
இதன்மூலம், அதிமுக – தமிழக பாஜக இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.