பேனா சின்னத்திற்கு எதை வைத்து அனுமதி கொடுத்தீங்க.. இனிமேல் பார்ப்பீங்க ; மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்..!!
Author: Babu Lakshmanan29 April 2023, 11:18 am
சென்னை ; கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினாவில் உள்ள கடல் பகுதியில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.
பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத -சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என்று இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.