திமுகவினரின் சொத்து கணக்கு விவகாரம்… மத்திய அரசை நாடாதது ஏன்…? அண்ணாமலைக்கு அதிமுக கேள்வி..!!

Author: Babu Lakshmanan
2 May 2023, 11:03 am

தமிழ்நாடு கொலை களமாக மாறியதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுடைய கையாலாகாத அரசு தான் காரணம் என்று அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி கடுமையாக தாக்கி பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் சுங்குவார்சத்திரம் எம்ஜிஆர் சிலை அருகே மே தின பொது கூட்டம் நடைபெற்றது. இந்த மே தின பொது கூட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கழக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற இந்த பொது கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ.அரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கழக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் கொலைகள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என வித்தியாசம் இல்லாமல் கொலை செய்யும் மாநிலமாக, கொலை களமாக தமிழகம் மாறியதற்க்கு ஸ்டாலினுடைய கையாலாகாத அரசு தான் காரணம்.

திமுக எதிர்கட்சியாக இருந்த போது, நாங்கள் ஆட்சிக் கொண்டால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கனிமொழி கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்த உடனே அனைத்து இடங்களிலும் ஆல்டைம் வெண்டிங் மெஷின் வைத்து மதுபானம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது கேவலமான விஷயம்.

திமுகவினர் கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களை பட்டியலிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க ஏன் மத்திய அரசை வலியுறுத்தவில்லை.

1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொலை, கொள்ளைகள் அதிகமான போது சென்னைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் சுபோத்கான்சகாய் ஆய்வு செய்ததில், தமிழகத்தில் அதிகமான குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதை காரணம் காட்டி, மத்திய அரசை வலியுறுத்தி திமுக ஆட்சியை கலைக்க செய்தார்.

80 கோடி ரூபாயில் பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தத்தை பார்க்கும்போது, மாநில அரசுடன் மத்திய அரசு இணக்கமாக உள்ளதை கண்கூடாக காணமுடிகிறது என பொதுமக்களே வினா எழுப்புகின்றனர், எனக் கூறினார்.

தலைமை கழக பேச்சாளர் சசிரேகா பேசும்போது, ஊரார் பணத்தை கொள்ளை அடித்தால்தான், கருணாநிதியின் ஆத்மா சாந்தியடையும் என கடுமையாக சாடினார்.

மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரமான வி சோமசுந்தரம் பேசும்போது, மக்கள் மீது அக்கறை இல்லாமல் திமுக அரசு செயல்படுகிறது, எனவே தான் பல ஆண்டுகால வரலாற்றை மறந்து விட்டு தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் எட்டு மணி நேரம் வேலையை 12 மணி நேர வேலை என ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்து தொழிலாளர்களின் ஏகோபித்த கோபத்தை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெற்றுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளருமான மதனந்தபுரம் கே.பழனி, மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜன், ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிங்கில் பாடி ராமசந்திரன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 459

    0

    0