கிராம சபையில் நடந்த வாக்குவாதம்… கேள்வி கேட்டவருக்கு மைக்கை தர மறுத்த அமைச்சர்… வலுக்கட்டாயமாக இளைஞர் வெளியேற்றம்!!
Author: Babu Lakshmanan2 May 2023, 12:00 pm
கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமவளக்கடத்தல் குறித்த கேள்வி எழுப்பிய இளைஞரிடம் அமைச்சர் மனோதங்கராஜ் வாக்குவாதம் செய்ததுடன் காவல்துறையை வைத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அருவிக்கரை ஊராட்சி தலைவர் சலேட் கிளட்டஸ் மேரி தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, சமூக ஆர்வலரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பத்பநாபபுரம் தொகுதி வேட்பாளருமான சீலன் என்பவர் கேரளாவிற்கு கனிமவளங்கள் அதிகளவில் கடத்தப்படுவது குறித்தும் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் மனோதங்கராஜ் இளைஞரிடம் ஆவேசமாக, ‘நீ தான் கல்குவாரி நடத்துபவர்களிடம் கமிஷன் வாங்கி கொண்டு தடுக்கிறாய். அருவிக்கரை கிராமசபா கூட்டத்தில் பேசுவதற்கு நீ யார். அருவிக்கரை ஊராட்சியில் உள்ளவர்கள் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும்,’ என ஆவேசமாக கூறினார். மேலும், கேள்வி கேட்டால் பதில் சொல்லுவதற்கு மைக்கை என்னிடம் தாருங்கள் என அந்த நபர் கேட்க, அமைச்சர் மைக்கை தர மறுத்துவிட்டார்.
தொடர்ந்து, தக்கலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையிலான காவல்துறையினர் உதவியுடன் கேள்வி கேட்ட இளைஞரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், கிராமசபை கூட்டத்தால் கலந்து கொண்ட பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
கிராம சபா கூட்டத்தில் தமக்காக கேள்வி கேட்டதற்காக இளைஞர் வெளியேற்றப்பட்டதால் பெண்கள், மூதாட்டிகள் சிலர் கூட்டத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.