படமெடுத்து நின்ற வெள்ளை நாகம்… ஆச்சர்யத்தில் பார்த்த கோவை மக்கள் ; வைரலாகும் வீடியோ!
Author: Babu Lakshmanan4 May 2023, 12:41 pm
கோவை ; கோவை குறிச்சி அருகே மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம் பத்திரமாக மீட்கப்பட்டு மாங்கரை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புகுந்த மழை நீரில் வெள்ளை நாகம் ஒன்று அடித்து வரப்பட்டதாக தெரிகிறது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாம்பு பிடி தன்னார்வ அமைப்பிற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் மழை நீரில் இருந்த 3.5 அடி நீளமுள்ள வெள்ளை நாகத்தை பத்திரமாக மீட்டனர்.
பிறகு கோவை சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வெள்ளை நாகம் மாங்கரை வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இதே போல கடந்த 2022ல் குறிச்சி பகுதிக்கு 3.5 அடி நீளமுள்ள வெள்ளை நாகம் வந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அருகே உள்ள குளத்தில் இருந்து வெள்ளை நாகம் மழை நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.