உருட்டுவது பூனைகுணம்.. கெடுப்பது குரங்கு குணம்! கொல்வது முதலை குணம் ; OPS-TTV சந்திப்பு குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்!
Author: Babu Lakshmanan9 May 2023, 9:32 am
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என சென்ற இடமெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே தீர்ப்பு கிடைத்துள்ளது.
சட்டப் போராட்டம் நடத்தி நடத்தி ஒருகட்டத்தில் ஓபிஎஸ் சோர்ந்தே போய் விட்டார். இதையடுத்து, எந்த நேரத்திலும், டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து, அவர்களுடன் ஓபிஎஸ் கைகோர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனை உறுதி செய்யும் விதமாகவே பல பேட்டிகளில் ஓபிஎஸூம் கூறிவந்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்றார். தனது வீட்டுக்கு வந்த ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனை வாசல் வரை சென்று வரவேற்ற டிடிவி தினகரன் இருவருக்கும் பொன்னாடை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, டிடிவி தினகரன் கூறியதாவது :- ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். லட்சியத்தை அடைவதற்காக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஓபிஎஸ் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட அன்பு உண்டு. ஓபிஎஸ்-ஐ நம்பி அவர் கைப்பிடித்து இருட்டில் கூட செல்ல முடியும். இபிஎஸ்-ஐ நம்பி செல்ல முடியுமா? சிபிஎம் (மார்க்சிஸ்ட்), சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட்) போல் இரு கட்சிகளும் செயல்படும் என டிடிவி.தினகரன் கூறினார்.
அதேபோல் ஓபிஎஸ் கூறுகையில்;- சசிகலாவை சந்திக்க முயற்சித்தோம். அவர் வெளியூர் சென்றிருப்பதால் திரும்பி வந்தவுடன் நிச்சயம் சந்திப்பதாக கூறியிருக்கிறார். அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான முயற்சி தான் இந்த சந்திப்பு, என்றார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;- இதை பார்க்கும்போது தலைவரின் பாடலே நினைவில் வருகிறது. அன்றே கூறினார் புரட்சிதலைவர்! உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைகுணம்! காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையே கெடுப்பதுவும் குரங்குகுணம்! ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாற்றல் முதலைகுணம்! ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா!, என்று பதிவிட்டுள்ளார்.