கோவையில் வ.உ.சிதம்பரனார் சிலை திறப்பு : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி கோரிக்கை வைத்த வஉசி பேத்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2023, 3:03 pm

கோவை வ.உ.சி மைதானத்தில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் 5 சென்ட் இடத்தில் ஏழு அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனருக்கு முழு உரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இந்த சிலை திறப்பு விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்வுக்கு பின் புதிதாக திறக்கப்பட்ட வ.உ.சி. சிலைக்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் கோவை பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் வ. உ.சி-யின் பேத்தி மரகத மீனாட்சி ராஜா வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலை திறப்பிற்கு வந்திருந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.கோவையில் சுதந்திரத்திற்காக போராடிய செக்குழுத்த செம்மல் வ.உ சிதம்பரனாருக்கு சிலை அமைத்திருப்பது மகிழ்ச்சி. இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வ.உ.சி சிறையில் இருந்த போது எழுதிய மெய்யறம் என்ற நூலை பள்ளி குழந்தைகளின் பாட புத்தகத்தில் அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுகிறேன்.

மெய்யறம் என்ற நூல் ஆத்திச்சூடி போன்று ஒரு வரியில் உயர்ந்த கருத்துக்களை கூறக்கூடியது.அந்த நூல் மக்களுக்கு சென்று சேரும்பொழுது தனது தமிழ் புலமையை கூட மக்களின் நன்மைக்காக செலவழித்தார் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 596

    0

    0